|
சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப் பைகளை பயன்படுத்தும்படி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவுறுத்திள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கலந்துக்கொண்டு, சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் சிறந்த முறையில் பங்காற்றிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு 'இந்திரா காந்தி பர்யாவரன்' விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்த பருவகாலத்தில் ஒருவர் குறைந்தது ஒரு செடியாவது நட்டு அதை பராமரிக்க வேண்டும். இதை ஓர் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது பூமி, இயற்கைச் செல்வங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். இது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களிலும் சுற்றுச் சூழல் குறித்த பாடத்திட்டங்களை இடம் பெற செய்வது அவசியம்.
தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி மற்றும் சணல் பைகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
|